Saturday, December 18, 2010

சிவன்மலை கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று பெற முயற்சி

காங்கயம் : ""சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, விரைவில் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெறப்படும்,'' என அறங்காவலர் குழு தலைவர் ராஜ்குமார் தெரிவித்தார்.காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது; அறங்காவலர் குழு தலைவர் ராஜ்குமார், பூஜையை துவக்கி வைத்தார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவன்மலை கும்பாபிஷேகத்தையொட்டி, ராஜகோபுரம், மண்டபம், குளியலறை, கழிவறை, யாகசாலை மண்டபம் கட்டுதல், குடிநீர் குழாய் இணைப்பு, வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தல், ஸ்டோர் ரூம் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் ரூ.80 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.ரூ.41.30 லட்சம் மதிப்பில், மலை மீது கோவில் முன்புள்ள காலியிடத்தில் கான்கிரீட் தளம் அமைத் தல், கர்ப்பகிரகத்துக்கு வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் மண்டபங்கள் கட்டும் வேலைகள் நடக்கின்றன. அலுவலக கட்டடத்துக்கு மேல் திருமண மண்டபம் கட்ட பூமி பூஜை இன்று (நேற்று) நடந்தது; மதிப்பு ரூ.70 லட்சம்.

மேலும், குளியலறை, கழிவறை கட்டுதல், உள்பிரகாரத்தில் "கியூ லைன்' அமைத்தல், மலையடிவாரத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கொட்டகை மற்றும் "கியூ லைன்' அமைத்தல், கருணை இல்லம் கட்ட ரூ.70 லட்சம் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டு, கட்டப்பட உள்ளது.அர்த்த மண்டபத்தில் உள்ள கதவுப்படி மற்றும் பக்கச்சுவர்களுக்கு வெள்ளித்தகடு அமைக்கும் பணி நடக்க உள்ளது. மேலும், விசேஷ நாட்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கு வரும் வாகனங்கள், மீண்டும் அதே வழியில் திரும்பிச் செல்வதால், வாகனப்

பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, ரூ.1.8 கோடி மதிப்பில், ரோடு அகலப்படுத்தும் பணியும், மலை மீது இருந்து வேறு வழியில் சென்று, கொண்டை ஊசி வளைவு வரை 400 மீட்டருக்கு புதிய ரோடு அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், வாகனப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.மலைப்பாதையில் இணைப்புச்சாலை அமைத்தல், நூலகம் கட்டுதல், மின்சார பணிக்காக ரூ.76.46 லட்சம் மதிப்பீடு செய்து அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் கோபுரங்களுக்கு மின்விளக்கு பொருத்தவும், அடிவாரத்தில் இருந்து மலை மீது வரை வாகனப்பாதையில் 1.8 கி.மீட்டருக்கு சூரிய ஒளி மின்சக்தி மின்விளக்குகள் அமைக்க தொழில்நுட்ப ஆலோசனை பெறப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று விரைவில் பெறப்படும், என்றார்.அறங்காவலர்கள் வேலுச்சாமி, பழனிசாமி, பொன்னி, மாரன் மற்றும் செயல் அலுவலர் நடராஜன் உடனிருந்தனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...