திருப்பூர் : ""போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடையும்படியான சம்பள உயர்வு அறிவிக்கப்படும்,'' என, போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். திருப்பூர் போக்குவரத்து மண்டல அலுவலகம் திறப்பு, புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம், விபத்தின்றி பணிபுரிந்த டிரைவர்களுக்கு பரிசளிக்கும் விழா, திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள பணிமனை வளாகத்தில் நேற்று நடந்தது. கோவை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பால்ராஜ் வரவேற்றார். நெடுஞ்சாலை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் நேரு பேசியதாவது: இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில், தமிழகத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன; கட்டணங்களை உயர்த்தாத பட்சத்தில், சலுகை வழங்க இயலாது. கடந்தாண்டில், 12 சதவீத உயர்வு என்பதே 200 கோடி ரூபாய் செலவாக இருந்தது; தற்போதைய நிலவரப்படி 420 கோடி இருந்தால்தான் செலவை ஈடுகட்ட முடியும். 240 மணி நேர வேலை என்ற அடிப்படையில், 2,000 பேர் புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்; பணி நேரம், 25 ஆண்டுகளில் மூன்று முறை பதவி உயர்வில், கடைசி பத்தாண்டுகளில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என கோரப்பட்டுள் ளது. கோரிக்கைகள் குறித்த அனைத்தும் பேச்சளவில் உள்ளது; வரும் 20ம் தேதி முதல்வர் முன்னிலையில் இறுதி முடிவெடுத்து அறிவிக்கப்படும். இந்த ஒப்பந்தம் மூலம், மற்ற துறைகளை விட அதிக சம்பளம் பெறும் வாய்ப்பு வருங்காலத்தில் உள்ளது. முன்பு 16 ஆயிரம் பஸ்களுடன், ஏழு போக்குவரத்து கழகங்கள் இருந்தன; தற்போது 20 ஆயிரம் பஸ்கள், ஒன்பது போக்குவரத்து கழகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் அலுவலர்கள் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் 20 ஆயிரம் பஸ்களில், 15 ஆயிரம் புதிய பஸ்களாக ஓடுகின்றன; ஜன., மாத இறுதிக்குள், மேலும் 3,000 பஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. 45 ஆயிரம் பேர், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1,200 தொழில்நுட்ப பணியாளர்கள் அமர்த்தப்பட உள்ளனர். வரும் 20ம் தேதி அறிவிக்க உள்ள ஒப்பந்தத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மகிழும்படியான சம்பள உயர்வு இருக்கும்.இவ்வாறு, நேரு பேசினார்.
கலெக்டர் சமயமூர்த்தி, மேயர் செல்வராஜ், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் மண்டல பொதுமேலாளர் செல்வராஜ் நன்றி கூறினார். பரிசளிப்பு: 25 ஆண்டுகள் விபத்தின்றி பஸ்சை இயக்கிய டிரைவர்கள் எட்டு பேருக்கு தங்க பதக்கம், தலா 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி ஓட்டிய 101 டிரைவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய்; 15 ஆண்டுகளுக்கு மேல் விபத்தின்றி ஓட்டிய 149 டிரைவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் என 258 பேருக்கு, 14.90 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment