Friday, December 24, 2010

திருப்பூர் மாவட்டத்தில் 25 பள்ளிகளில் முதலுதவி சிகிச்சை பயிற்சி: கலெக்டர்

மடத்துக்குளம்: ""முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது,'' என மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி பேசினார். மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு உயர்நிலைப்பள்ளியில் நேற்று புதிய வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தில் 20 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட நூலகர் அலுவலகம் தொடக்கவிழா நடந்தது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். திருப்பூர் கலெக்டர் சமயமூர்த்தி பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 167 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, பள்ளிகள் உள்ளிட்ட 1,817 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் மூன்று லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி வசதி, சைக்கிள், கணினிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.மாணவர்களின் கல்வித்தரம் உயர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.விலங்குகள் மற்றும் தாவரங்கள் மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் பசுமைபடை அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் பள்ளி மாணவர்கள் வனத்தை முழுமையாக புரிந்து கொள்ள மாதத்தில் இரண்டு நாட்கள் வனப்பகுதிகளுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் திட்டத்தில், நான்கு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளாகத்தில் மரம் வளர்ப்பிற்காக தலா 250 மரக்கன்றுகளும், 25 ஆயிரம் ரூபாய் நிதியும் வழங்கப்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படும் போது உரிய முதலுதவி சிகிச்சைகள் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வை மாணவப்பருவத்தில் ஏற்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.முதலுதவி சிகிச்சையை மாணவர்களே மேற்கொள்ளும் வகையில், மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது',இவ்வாறு கலெக்டர் பேசினார். விழாவில், ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் ,ஒன்றியக்குழு உறுப்பினர் முபாரக்அலி, தலைமையாசிரியர் ஆண்டாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...