Monday, December 27, 2010

கடும் பனியிலும் விமானம் தரையிறக்கலாம் : கை கொடுக்கிறது "3 பி' தொழில் நுட்பம்

http://img.dinamalar.com/data/large/large_154205.jpg 
கோவை : "கடும் பனிப்பொழிவு காலங்களிலும், "3பி' தொழில் நுட்பத்தில் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்கலாம்; பயணிகள் அஞ்சத் தேவையில்லை' என, கோவை விமான போக்குவரத்து மேலாண்மை அதிகாரி தெரிவித்தார்.

டில்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பார்வை தூர வரையறையை விமான போக்குவரத்துத்துறை தளர்த்தி, நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. குறைந்தபட்சமாக 50 மீ., வரை தெளிவான பார்வைப் புலன் இருந்தால் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். தரையிறக்குவதில் கையாளப்படும் மூவகை தொழில் நுட்பத்தில் "3பி' முறையில் விமானத்தை தரையிறக்க முடியும். இத்தகைய தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, விமானிகளின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே மோசமான வானிலை நிலவும் போது விமான சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே "3பி' தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற விமானிகள் உள்ளனர்.

கோவை விமான போக்குவரத்து மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.எல்.எஸ்., (இன்ஸ்ட்ருமென்ட் லேண்டிங் சிஸ்டம்) எனப்படும் விமானம் தரையிறங்கும் முறையில் பார்வை தூர வரையறை ( விசிபிலிட்டி லிமிட் ) மூன்று பிரிவுகளாக உள்ளது. இதில், முதல் பிரிவு 800 மீ., மேல், இரண்டாம் பிரிவு 500 மீ., மேல் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவில் ஏ.பி.சி., என, மூன்று உட்பிரிவுகள் உள்ளன. இதில் "3பி' உட்பிரிவில் 50 மீ., வரை தெளிவான பார்வை இருந்தாலே விமானங்களை தரையிறக்க முடியும். தேர்ந்த விமானிகளால் மட்டுமே இம்முறையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே இத்தகைய பிரத்யேக பயிற்சி பெற்ற விமானிகள் பணியில் உள்ளனர். இதன் காரணமாகவே, கடும் பனிப்பொழிவு நிலவும் போதும். ஒரு சில நிறுவனங்களின் விமான சேவை ரத்து செய்யப்படுவதில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் குளிர் காலத்தில் "ஜீரோ விசிபிலிட்டி' பார்வை தூரத்திலும் விமானத்தை தரையிறக்கும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தியாவில் அதற்கான தேவை இல்லாததால் அத்தகைய தொழில் நுட்பம் பின்பற்றப்படுவதில்லை. எதிர் காலத்தில் தேவை ஏற்பட்டால் "ஜீரோ விசிபிலிட்டி' நேரத்திலும் விமானத்தை தரையிறக்கும் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பார்வை தூர வரையறை குறைக்கப்படுவதால், விமான பாதுகாப்பு குறித்து பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...